திருக்குறளில் செயல்திறன்
கி. ஆ. பெ. விசுவநாதம்
திருக்குறளில்
செயல்திறன்
முத்தமிழ்க் காவலர், கலைமாமணி
டாக்டர் கி. ஆ. பெ. விசுவநாதம், டி. லிட்.
பாரி நிலையம்
184.பிராட்வே.சென்னை.600108
முதற்பதிப்பு : 1984
இரண்டாம் பதிப்பு : 1993
விலை. ரூ 4.00
* * *
கவின்கலை அச்சகம். பாலவாக்கம், சென்னை-600 041,
தொலைபேசி : 41 71 41
பதிப்புரை
திருக்குறள், தொட்டனைத்து ஊறிச் சுரக்கும் அறிவுக் கேணி. திருக்குறளின் பொருள் வளமையும் சிறப்பும் கற்கக் கற்கப் பெருகிக் கொண்டே இருக்கும்.
முத்தமிழ்க் காவலர் அவர்கள் திருக்குறளைத் தொட்டு நயங்காட்டும்போது, புதுப்புதுச் சுவையும், அழகும், செழுமையும் ஒளி வீசுகின்றன. அவை நம்மையும் திருக்குறள் சிந்தனையாளராக உயர்த்துகின்றன.
செயல் திறனே உருவான முத்தமிழ்க் காவலர் அவர்களின் ‘திருக்குறளில் செயல்திறன்’ திருக்குறளுக்குச் சிறப்புச் சேர்ப்பதுடன், செயலாண்மை ஊக்கத்தையும் அனைவருக்கும் தரும் என்பதில் ஐயமில்லை,
தமிழ் ஆர்வமுள்ளோருக்கு நல்ல அறிவு விருந்து, செயல் திறன் உடையோருக்கு மகிழ்வூட்டும் பாராட்டு; செயல் திறனை மறந்தோர்க்கு நினைவூட்டி இடித்துரை நல்கும் வழிகாட்டி— இந்நூல்.
இத்தகு தெளிவு நூல்களை இன்னும் பலவாகத் தொடர்ந்து ஆக்கித் தந்து நம்மை வாழ்விக்க வேண்டும், இன்னும் பல்லாண்டு நலமோடு வாழ்ந்து நமக்கு வழி காட்டி வரவேண்டும் என்று முத்தமிழ்க் காவலரை வேண்டுகிறோம்.
இதனை வெளியிடுவதற்கு வாய்ப்பளித்ததற்கு முத்தமிழ்க் காவலர் அவர்கட்கு எங்கள் நன்றியும் வணக்கமும் தெரிவித்துக் கொள்ளுகின்றோம்.
இந்நூலின் அச்சுப் பதிப்பிற்கு உதவிய ஆசிரியர் புலியூர்க் கேசிகனாருக்கும் எங்கள் நன்றி.
—பதிப்பகத்தார்
திருக்குறளில் செயல்திறன்/பக்கம் 07-14
திருக்குறளில் செயல்திறன்/பக்கம் 15-22
திருக்குறளில் செயல்திறன்/பக்கம் 23-27
திருக்குறளில் செயல்திறன்/பக்கம் 28-29
திருக்குறளில் செயல்திறன்/பக்கம் 30-31
திருக்குறளில் செயல்திறன்
எண்ணங்களைக் கோடிக் கணக்கில் எண்ணுகிறோம்;
எழுத்துக்களை இலட்சக் கணக்கில் எழுதுகிறோம்;
பேச்சுக்கனை ஆயிரக் கணக்கில் பேசுகிறோம்;
கொள்கைகளை நூற்றுக் கணக்கில் கூறுகிறோம்;
திட்டங்களை பத்துக் கணக்கில் வகுக்கிறோம்;
செயலில் ஒன்றையாவது உருவாகச் செய்வதில்லை.
இதைத் திருவள்ளுவர் நன்றாக உணர்ந்திருக்கிறார் என்று தெரிகிறது. திருவள்ளுவர் தமிழகத்துச் சான்றோர்களில் தலைசிறந்த பேரறிஞர்.
மனிதன் மனிதனாகப் பிறந்தும் பறவையைப்போல வானத்தில் பறக்கக் கற்றுக்கொண்டிருக்கிறான்; மனிதன் மனிதனாகப் பிறந்தும் மீனைப்போலத் தண்ணிரில் நீந்தக் கற்றுக்கொண்டிருக்கிறான்; மனிதன் மனிதனாகப் பிறந்தும் மனிதனைப்போலத் தரையில் நடக்கக் கற்றுக் கொள்ளவில்லையே என்று வருந்தியிருக்கிறார். அதன் விளைவுதான் திருக்குறள்.
திருக்குறளில் 133 அதிகாரங்கள் உள்ளன. ஆனால் தலைப்புக்கள் 133 இல்லை, குறிப்பறிதலுக்கு இரண்டு தலைப்புக்கள்; நட்புக்கு ஆறு தலைப்புக்கள் (நட்பு, நட்பு ஆராய்தல், பழைமை, தீ நட்பு, கூடாநட்பு, சிற்றினம் சேராமை); செயல் திறனுக்குப் பன்னிரண்டு தலைப்புக்கள். இதிலிருந்து வள்ளுவர் செயல்திறனை மக்களாய்ப் பிறந்தவர்கள் கட்டாயம் பெற்றாக வேண்டும் என்று வலியுறுத்தியிருக்கிறார் என நன்கு தெரிகிறது.
அத் தலைப்புக்களிலும் கால் பகுதியில் மூன்று ஆள்வினை உடைமை, இடுக்கண் அழியாமை, ஊக்கம் உடைமை—என்பன.
அரைப்பகுதியில் மூன்று; தெரிந்து செயல்வகை, தெரிந்து தெளிதல், தெரிந்து வினையாடல்—என்பன.
முக்கால் பகுதியில் மூன்று; வலியறிந்து செய்தல், காலம் அறிந்து செய்தல், இடன் அறிந்து செய்தல்— என்பன.
முழுப்பகுதியில் மூன்று; வினைத்தூய்மை, வினைத்திட்பம், வினை செயல்வகை—என்பன.
திருக்குறளில் எந்தப் பொருளுக்கும் இத்தனை தலைப்புக்களில்லை, இதிலிருந்து மக்களாய்ப் பிறந்தவர்களுக்குப் பெரிதும் வேண்டுவது செயல்திறனே என்று தெரிகிறது.
செயல்திறனைப் பன்னிரண்டு தலைப்புக்களில் நூற்று இருபது குறள்களில் மட்டும் வள்ளுவர் விளக்கவில்லை. "செய்" என்ற சொற்களும், அதைத்தழுவிய சொற்களுமாக 53 சொற்களை 215 குறள்களில் பதித்துச் செயல்திறனைப் புகுத்தியிருக்கிறார், அவையாவன:— “செய்” என்ற சொல்லின் குறள்கள் 110, 265, 455, 463, 466, 653, 663, 677, 972. 9
“செய” என்ற சொல்லின் குறள்கள் 446, 466, 1001, 1021 4
“செயப்பட்டார்” 105, “செயல்” 67, 316, 318, 409, 437, 470, 538, 634, 664, 672, 677, 832, 835, 894, 905, 975. 33, 333, 461, 471, 439, 516, 518, 637, 668, 673, 675, 676, 948. 949 31
“செயலின்” 679, “செயற்கு” 26, 375, 781 4
“செயற்கை” 637, “செயிர்” 330, “செயிரின்” 258, “செயிர்ப்பவர்” 880 4
“செயின்” 104, 109, 116, 120, 150, 175, 181, 308, 483, 484, 493, 494, 497, 537, 547, 586, 804 805, 808, 852, 881, 965, 1257, 1288 24
செயும்" 219, செய்க 36, 512, 669, 759, 893 6
செய்கலாதார் 26, செய்கலான் 848, செய்கிற்பாக்கு 515 செய்கை 631 4
செய்க 101, 102, 103, 109, 312, 1175, 1176, 1225 8
செய்தது 1240, 1279, செய்தபின் 313 3
செய்தல் 274, 843, 954, 1090, 1226, செய்தலால் 1201 6
செய்தலின் 182, 192, செய்தற்கு 489, செய்தற்பொருட்டு 81, 212 5
செய்தார் 208, 320, செய்தாரை 158, 314 செய்தார்கள் 1243 5
செய்தார்க்கு 658, 987, 1162 3
செய்து 118, 246, 289, 303, 314, 388, 551, 563, 660, 803, 815, 829, 878, 907, 934, 1025, 1028, 1035, 1073, 1275, 1294, 21
செய்ப 11, 95 செய்யப்படும் 335, செய்யவ 1086 செய்யவர் 167 4
செய்யற்க 205, 206, 327, 590, 655, 656 6
செய்யா 203, 548, 553, 558, 569 5
செய்யாக்கால் 987, செய்யாது 255, 219, 437, 538 5
செய்யாமல் 101, 313, செய்யாமை 157, 261, 297, 311, 312, 317, 655, 852 10
செய்யாமையால் 466, செய்யார் 164, 172, 173, 174, 320, 654, 699, 956, 962 10
செய்யான் 865, செய்யின் 157, 205, 319, 559, 590, 807, 1283 8
செய்யும் 57, 79, 232, 574, 803, 941, 249, 554, 572, 700, 735, 754, 1208, 631 14
செய்வார் 29, 266, 584 3
செய்வாரின் 295, செய்வார்கள் 909 2
செய்வார்க்கு 120, 462, 998, 1028 4
செய்வான் 520, 677, 758, 867 4
செய்வானேல் 655, செய்வானை 516; செய்வேன் 1221 3
ஆகச் சொற்கள் 53; குறள்கள் 215
திருவள்ளுவர் கருத்துக்களைக் கூறும் முறை ஒரு தனி முறை, அது ஒன்றை மிகமிக உயர்த்திக் கூறி மற்றொன்றால் அதை அழித்துக் காட்டுவது; இராவணனின் வீரத்தைப் புகழ்வதெல்லாம் இராமனின் வீரத்தை உணர்த்தவே என்பதுபோல.
"ஊழிற் பெருவலி யாவுள மற்றொன்று
சூழினுந் தான் முந் துறும்" (380)
வள்ளுவர் ஊழின் வலிமையை மிகமிக உயர்த்திக் காட்டியிருப்பதெல்லாம், முயற்சியின் அருமையையும் பெருமையையும் காட்டுதற்கே, இவ் வுண்மையை.
"ஊழையும் உப்பக்கம் காண்பர் உலைவின்றித்
தாழாது உஞற்று பவர்" (620)
என்ற குறளால் அறியலாம்.
"பொருளில்லார்க்கு இவ்வுலகம் இல்லை" (247)
என்றும்,
"பொருள் அல்லவரை ஒரு பொருளாகச் செய்யும்
பொருள் அல்லது இல்லை பொருள்" (751)
என்றும்,
"அறம் ஈனும் இன்பமும் ஈனும் திறனறிந்து
தீதின்றி வந்த பொருள்" (754)
என்றும், பொருட்செல்வத்தை மிகமிக உயர்த்திக் கூறியிருப்பதெல்லாம், அருட்செல்வத்தின் உயர்வைக் காட்டுவதற்காகவே,
"அருட்செல்வம் செல்வத்துள் செல்வம் பொருட்செல்வம்
பூரியார் கண்ணும் உள." (241)
என்ற குறளால் அருட்செல்வந்தான் மிகமிக உயர்ந்த செல்வம் ஆகும் என உணர்த்துகிறார். ஏனெனில் "பொருட்செல்வம் அயோக்கியர், பொய்யர், சூதர், கொலையர், மூடர் ஆகியோரிடத்தும் இருக்கும். அருட்செல்வம் ஒருக்காலும் அவர்களிடத்தில் போய்ச்சேராது; அவர்களைத் திரும்பியும் பார்க்காது" என்ற இக்குறள் பொருட்செல்வத்தின் உயர்வை அழித்துக் காட்டுவதை நன்கு அறியலாம்.
இவை போலவே, "சொல்லின்" அருமை பெருமைகளை,
"சொலல்வல்லன் சோர்விலன் அஞ்சான் அவனை
இகல்வெல்லல் யார்க்கும் அரிது" (647)
என்றும்,
"நாநலம் என்னும் நலனுடைமை அந்நலம்
யாநலத்து உள்ளதூஉம் அன்று" (641)
என்றும், மிகமிக உயர்த்திக் கூறியிருப்பதெல்லாம், செயலின் வலிமையை உயர்த்திக் காட்டவே ஆகும். இதனை,
"சொல்லுதல் யார்க்கும் எளிய அரியவாம்
சொல்லிய வண்ணம் செயல்" (664)
என்ற குறளால் சொல்லின் பெருமையை அழித்துக் காட்டுவதால் நன்கு அறியலாம்.
ஆம்! மலையளவு பேசுவதைவிட கடுகளவு செய்வது நல்லது என்பது சான்றோர் கருத்து. கோடை இடிஇடிப்பதினாலேயே குளம் நிறைந்துவிடுவதில்லை. மழை பெய்தால்தான் குளம் நிறையும். இதை மற்றவர்கள் உணராவிட்டாலும் கோடையிடிப் பேச்சாளர்களாவது உணர்வது நல்லது!
"யார் பெரியர்?" என்பது ஒரு கேள்வி. இதற்குப் பலர் பலவாறு விடைகூறுகின்றனர். நாமே ஒருகாலத்தில் பணக்காரரைப் பெரியவர் என்று நினைத்தோம். அடுத்து நிலக்காரரைப் பெரியவர் என்று நினைத்தோம். பின் படித்தவர், பட்டம் பெற்றவர், பதவீயிலிருப்பவர் பெரியவர் என எண்ணினோம். கொஞ்ச காலத்துக்குமுன் எழுத்தாளரையும் பேச்சாளரையும் பெரியவர் எனக் கருதினோம். இப்போது வயதுமுதிர்ந்த கிழடுகள்தாம் பெரியவர்கள் என்று நினைத்துக்கொண்டு இருக்கிறோம். திருவள்ளுவர் உள்ளம் இவற்றில் எதையும் ஒப்பவில்லை. யார் பெரியர்? என்ற கேள்விக்கு அவர் கூறுகின்ற விடை பணத்தர் அல்லர்; நிலத்தர் அல்லர்; படித்தர் அல்லர்; எழுத்தர் அல்லர்; பேச்சர் அல்லர்; "செய்வார் பெரியர்" என்று கூறுகின்றார். இவ்வுண்மையை,
"செயற்கரிய செய்வார் பெரியர்; சிறியர்
செயற்கரிய செய்கலா தார்" (26)
என்னும் குறளால் அறியலாம். இதிலிருந்து வயதில் பெரியவர்கள் ஆனாலும், செயல்திறன் இல்லாதவர்கள் சிறியவர்களே என்று தெரிகிறது.
மனுநீதியில் பிறப்பை முன்வைத்து உயர்வு தாழ்வு கூறி, பெரியவர் சிறியவரைச் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. ஒளவையார் அறத்தை முன் வைத்து "இட்டார் பெரியோர் இடாதார் சிறியோர்" எனக் கூறியுள்ளார். வள்ளுவர் செயல்திறனை முன்வைத்துச் "செய்வார் பெரியர் செய்யார் சிறியர்" எனக் கூறுகிறார். இது நம்மை மகிழ்விக்கிறது.
"செயற்கரிய செய்கலாதார்" எனும் இரண்டாவது அடியில் உள்ள "க" எழுத்திற்கு மாறாக "கு" என்ற எழுத்தை அமைத்தால், பொருள் இன்னும் நன்றாக அமையும். "செயற்கரிய செய்வார் பெரியர்" என்று சொல்லிவிட்டபொழுதே, அப்படிச் செய்யாதவர் சிறியர் என்ற பொருள் அடங்கிவிட்டது. மீண்டும் சிறியர் செயற்கரிய செய்யமாட்டார் என்று சொல்லவேண்டியதில்லை. இது கூறியது கூறல் என்ற குற்றத்தின்பாற்படும். திருவள்ளுவர் இத் தவறை ஒருபோதும் செய்திருக்கமாட்டார்.
கரையான்கள் செய்த பிழையோ, ஏடு எடுத்து எழுதியவர் பிழையோ, அச்சுக்கோப்பவர் பிழையோ இதில் புகுந்திருக்கிறது எனத் தெரிகிறது.
"செயற்கரிய" என்பதைச் "செயற்குரிய" எனக் "க" வைக் "கு" ஆக மாற்றியதும், எவராலும் செய்ய இயலாத பெரிய காரியத்தைச் செய்பவர்கள் பெரியவர்கள் என்றும், எல்லோராலும் எளிதாகச் செய்வதற்குரிய சிறிய காரியத்தையும் செய்ய முடியாதவர்கள் சிறியர் என்றும் பொருளாகிறது. இது செயல்திறனை நன்றாக விளக்கிக்காட்டுவதாக இருக்கிறது. அறிஞர் பெருமக்கள் விரும்பினால் இம் மாற்றத்தைச் செய்யலாம்.
திருக்குறளில் செயல்திறன் மிக விரிவாக, தக்க உவமைகளோடு காட்டப் பெற்றிருக்கிறது. திருக்குறளில் பல இடங்களில் உவமையாகப் பசு, புலி, மான், எலி, நாகம், அன்னம், ஆமை, சிங்கம், காகம், கூகை, முதலை, கொக்கு, புழு முதலியவைகள் வந்து விளையாடுகின்றன.
என்றாலும் மனிதனைவிட அதிக வலிமை உள்ளதும், மனிதனைவிடப் பெரிய உருவமும், மனிதனைப்போல நூறாண்டு வாழ்வது மாகிய யானைகளைத்தான் செயல் திறனுக்கு உவமையாகக் கூறவேண்டுமென்று எண்ணி, வள்ளுவர் திருக்குறளில் ஒரு யானைக் கூடத்தையே அமைத்து, அதில் எட்டு யானைகளைக் கட்டி வளர்த்திருக்கிறார் என்று தெரிகிறது.
1. பெரியதைச் செய்
செயல்திறனுக்கு நல்லதை எண்ணு, பெரியதை எண்ணு. அழுத்தமாக எண்ணு. ஆழமாக எண்ணு. அப்படியே ஆவாய். முனைந்து செய். வெற்றியா தோல்வியா என்று பாராதே. வாழ்த்தா, வசையா என்று கருதாதே. துணிந்து செய். முயன்று செய், வேட்டைக்குச் செல்வதானால் முயல் வேட்டைக்குச் செல்வதைவிட யானை வேட்டைக்குப் போவது நல்லது என்று கூறுகிறார். முயலை வென்று வெற்றிபெறுவதைவிட யானை வேட்டைக்குப்போய்த் தோல்வி அடைந்தாலும் சிறப்பே என்று வள்ளுவர் கருதுகிறார். ஒருவன் யானை வேட்டைக்குப்போய், யானையையும் கண்டு, குறிபார்த்து வேலையும் வீசி எறிந்து, குறி தவறி, யானையும் பிழைத்தோடிப்போய், வேலையும் இழந்துவிட்டு வெறுங்கையோடு திரும்பி வருகிறவனைப் பார்த்து. 'வீரன்' என்று வள்ளுவர் கூறுகிறார்.
கான முயலெய்த அம்பினில் யானை
பிழைத்தவேல் ஏந்தல் இனிது (772)
இக் குறள் சிறுசெயல்களிலே முயன்று வெற்றி பெறுவதைவிட, பெரிய செயல்களிலே முயன்று தோல்வி அடைவது சிறந்தது என்ற புதுக்கருத்தை விளக்குகிறது. இது முதல் யானை.
2. இடனறிந்து செய்
போர்க்களம் - ஒருயானை களத்தினுள்ளே நுழைந்து கூர்மையான வேலைத் தாங்கிப் போரிடவந்த வீரர்களை எல்லாம் தன் துதிக்கையால் வாரித் தரையில் அடித்துக் கொன்று குவித்தது. அன்று மாலை, அந்த யானை நீர் அருந்த ஏரிக்குச் சென்றபொழுது சேற்றில் காலை விட்டுக்கொண்டது. காலை எடுக்க முடியவில்லை. நகர முடியவில்லை, துன்பப்படுகிறது. பின்னால் ஒரு நரி வந்து யானையின் உடலைக் கடித்துத் தின்னுகிறது. யானையால் திரும்பி நரியை விரட்டவும் முடியவில்லை. இறுதியில் பலநாள் சேற்றிலே நின்று வேதனைப்பட்டுச் சாகிறது. குறள் இது-
காலாழ் களரில் நரியடும் கண்ணஞ்சா
வேலாள் முகத்த களிறு (500)
காலையில் ஆறடி நீளமுள்ள வேல்களை வைத்திருந்த வீரர்களை யானை கொன்றது. இதற்குத் துணைசெய்தது போர்க்களத்தில் உள்ள கெட்டிநிலம். மாலையில் அரை அங்குல நீளமுள்ள நகம்படைத்த நரியை விரட்டத் துணை செய்யாதது சேற்றுநிலம். இதிலிருந்து செயல்திறனுக்கு பெரிதும் தேவை இடனறிந்து செய்தல் என்று தெரிகிறது. இது இரண்டாவது யானை.
3. மகிழ்ச்சியோடு செய்
மிகக் கடினமானதாக இருந்தாலும் மகிழ்ச்சியோடு செய்யவேண்டும். வீரன் ஒருவன் போர்ச்செயலில் ஈடுபட்டிருந்தான், அவனை வாரி யடிக்கவந்த யானையைக் கையிலிருந்த வேலால் தாக்கினான். உடலிற் பதிந்த வேலோடு வீரிட்டு ஓடியது யானை. யானையோடு வேலும் போயிற்றே என்று வீரன் வருந்தினான்.
அப்பொழுது மாற்றான் ஒருவன் எறிந்த வேல் ஒன்று அவன் மார்பில் பாய்ந்தது. வீரன் அதைப்பற்றித் திருகிக் கையில் எடுத்துக்கொண்டு, மேலும் போர்செய்யத் தனக்கு ஒரு கருவி கிடைத்துவிட்டதே என்று மகிழ்ந்து நகைக்கிறான். போரிட இன்னுமொரு யானை வந்தாலும் வரட்டுமென்று மகிழ்ச்சியோடும், வெறியோடும் வேலேந்தி நோக்குகிறான். அவன் நெஞ்சில் பகைவனுடைய வேல்தாக்கிய புண்ணையும், அதலிருந்து கொட்டும் குருதியையும் அவன் நினைத்துப் பார்க்கவில்லை. அவன் நெஞ்சில் மகிழ்ச்சியே கூத்தாடுகிறது என்று வள்ளுவர் பொர்த்திறத்திலும், ஒரு செயல் திறத்தைக் காட்டி நம்மை மகிழ்விக்கிறார்.
கைவேல் களிற்றொடு போக்கி வருபவன்
மெய்வேல் பறியா நகும். (774)
இது மூன்றாவது யானை.
4. ஊக்கத்தோடு செய்
எக் காரியத்தைச் செய்தாலும் ஊக்கத்தோடு செய்தல் வேண்டும். அப்போது அச் செயல் விரைவில் வெற்றிபெறும் என்று வள்ளுவர் கூறுகிறார். அங்கும் ஒரு யானை, மிகவும் பெரியது. நீண்ட தந்தங்களையுடையது!
அப்போது ஒரு புலி யானையை நோக்கிப் பாய்ந்தது. மிகச் சிறிய உருவம், மிகச்சிறிய நகம் என்றாலும், அப் புலி ஊக்கத்தோடு இடதுபுறத்திலிருந்து வலதுபுறத்துக்கும் வலது புறத்திலிருந்து இடதுபுறத்துக்குமாக யானைமீது பாய்ந்து தாக்குகிறது.
யானை ஒரு பக்கம் திரும்புவதற்குள்ளாகப் புலி பல பக்கங்களிலும் தாக்குகிறது. அத்தாக்குதலைத் தாங்க முடியாமல் யானை அஞ்சி ஓடுகிறது. கூர்மையான நீண்ட தந்தத்தை உடைய மிகப்பெரிய யானை மிகச் சிறிய நகத்தையும் மிகச்சிறிய உருவத்தையும் உடைய புலியின் தாக்குதலுக்கு அஞ்சுகிறது.
காரணம், புலிக்கு உள்ள ஊக்கமும் சுறுசுறுப்பும் யானைக்கு இல்லாமையேயாகும். இக்காட்சியை வள்ளுவர் ஒரு குறளால் காட்டிச் செயல்திறனுக்கே ஓர் ஊக்கத்தை ஊட்டுகிறார்.
பரியது கூர்ங்கோட்டது ஆயினும் யானை
வெரூஉம் புலிதாக் குறின் (599)
இது நான்காவது யானை.
5. துணைகொண்டு செய்
எல்லா மனிதராலும் எல்லாக் காரியங்களையும் செய்ய முடியாது என்ற உண்வையையும் வள்ளுவர் உணர்ந்திருக்கிறார். ஒருவனால் செய்ய முடியாத காரியத்தைச் செய்யும் படி அவனைக் கட்டாயப்படுத்துவது தவறு என்றும் கருதுகிறார். ஒவ்வொருவர்க்கும் செயல்திறன் என்பது ஓரளவிலேயே இருக்கும் என்றும் எண்ணுகிறார்.
சிலரால் சில காரியங்களைச் செய்ய முடியாது. மனிதனால் ஒரு மதங்கொண்ட யானையைப் போய்ப் பிடிக்கமுடியுமா? முடியாது. ஆனால் அவன் அதைப் பிடித்தாக வேண்டும் என்றும் கூறுகிறார். எப்படி? மற்றொரு பழகிய யானையைக் கொண்டு அந்த யானையைப் பிடிக்கலாம். அதுபோலத் தன்னால் செய்யமுடியாத ஒரு செயல் மிகப் பெரியதாக இருந்தாலும், அதற்கு உற்றவர் துணையுடன் அக்காரியத்தைச் செய்தாகவேண்டும் என்று. செயல்திறனுக்கு இங்கும் யானையையே காட்டி ஒரு புதுவழி வகுத்துக் கூறியுள்ளார்.
வினையான் வினையாக்கிக் கோடல் நனைகவுள்
யானையால் யானையாத் தற்று. (678)
இது ஐந்தாவது யானை.
6. பொருளை வைத்துச் செய்
ஒரு வணிகத்தை நடத்தினாலும் ஒரு தொழிற்சாலையைத் தொடங்கினாலும் நிறையப் பொருளை வைத்துத் தொடங்கவேண்டும் என்று வள்ளுவர் கருதுகிறார்.
ஒரு வணிகன் 100 பாக்கு மூட்டைகளைக் கொள் முதல் செய்து வைத்திருந்தான். திடீரெனச் சந்தையில் விலை குறைந்தது: அந்த வியிைலிலும் 100 மூட்டைகளைக் கொள் முதல் செய்தான். பின்னும் விலை குறைந்தது: அதிலும் 100 மூட்டைகளைக் கொள்முதல் செய்தான். கடைசியாக அவனது சராசரி விலையும் சந்தை விலையும் ஒன்றாக வந்தது. அதற்குமேல் விற்று இலாபம் அடைந்தான். அவனிடம் நிறையப் பொருள் இல்லாதிருந் திருக்குமானால் அவன் தொழிலில் இழப்பு ஏற்பட்டிருக்கும். இதைக் காட்டவும் வள்ளுவர் நம்மை யானைக் காட்டுக்கு அழைத்துச் செல்கிறார்.
கோழிச்சண்டை, ஆட்டுச்சண்டை முதலியவைகளைப் பார்க்க அதிக ஆசை உண்டாகும். அதுபோல தரையிலிருந்து யானைச் சண்டையைப் பார்க்க முடியாது. பார்க்கும்போது பார்ப்பவர்க்கு துன்பமும் வரக்கூடும். அதற்காக அவர்களைக் குன்றின்மீது நின்று யானைச் சண்டையைப் பார்த்து மகிழச் சொல்கிறார் திருவள்ளுவர். நிறையப் பொருளை வைத்துக் கொண்டு வணிகத்தையோ தொழிற்சாலையையோ நடத்துகின்ற செயல்திறன். குன்றின்மீது இருந்து யானைச் சண்டையைக் கண்டு மகிழ்வது போன்றது என்று வள்ளுவர் விளக்குகிறார்.
குன்றேறி யானைப்போர் கண்டற்றால்
தன்கைத்தொன்று
உண்டாகச் செய்வான் வினை. (758)
இது ஆறாவது யானை.
7. மயங்காமல் செய்
இங்கும் ஒரு யானை நிற்கிறது. பக்கத்தில் ஒரு அழகிய பெண்னும் நிற்கிறாள். ஏதோ ஒரு வேலையாகப் போகிற ஒருவன் இங்கு நின்று யானையின் முகத்தையும், அதன் தலையில் உள்ள இரு குமிழ்களையும் அதன்மேல் போர்த்தியிருக்கும் "முகபடாம்" என்ற சேலையையும், பக்கத்தில் நிற்கின்ற அழகிய பெண்ணையும், அவளது எடுப்பான நெஞ்சையும், அதன்மேல் அணிந்துள்ள சேலையையும் மாறிமாறிப் பார்க்கிறான். அவனுக்கு இந்த இரண்டும் ஒன்றுபோலவே தோன்றுகிறது.
இறுதியில் அவன் கூறியது என்ன தெரியுமா? "கொல்லும் குணமுடைய இந்த யானை என்னைக் கொல்லாது விட்டது; கொல்லாக் குணமுடைய இப்பெண், என்னைக் கொன்றுகொண்டே இருக்கிறாள்" என்று.
இந்த மயக்கம் அவன் மேற்கொண்ட செயலைச் செய்ய முடியாமல் இழக்கும்படி செய்துவிட்டது.
ஆகவே, எதைச் செய்தாலும் இடையில் மயக்கத்திற்கு இடங்கொடுக்கக் கூடாது என்று வள்ளுவர் எச்சரிக்கிறார்.
கடாஅக் களிற்றின்மேல் கட்படாம் மாதர்
படாஅ முலைமேல் துகில். (1087)
இது ஏழாவது யானை,
8. கலங்காமல் செய்
எந்த நல்ல காரியத்தையும் எவர் தொடங்கினாலும் அதற்குப் பல இடையூறுகள் வரும். சிலர் புண்படுத்துவர். சிலர் பின்னுக்கு இழுப்பர். சிலர் துன்பப்படுத்துவர். சிலர் குறை கூறுவர். சிலர் பழியுங் கூறுவர். இன்னுஞ் சிலர் தடுக்கவும் செய்வர்.
இவைகளை யெல்லாம் கண்டு கலக்கமடைகிறவர்களால் எச்செயலையும் செய்ய முடியாது. அவர்கள் செயல்திறனையே இழந்துவிடுவர். ஒரு நல்ல செயலை மேற்கொண்டவர்கள் எத்தனை இடையூறு வந்தாலும் சிறிதும் கலங்காமல் கருமமே கண்ணாகக்கொண்டு அவற்றைச் செய்து முடிக்கவேண்டும் என்று வள்ளுவர் செயல்திறனுக்கு ஒரு இலக்கணம் கூறுகிறார். இதைக் கேட்ட நாம்,"இத்தனை இடையூறுகளுக்கு மத்தியில் இதை நம்மால் எப்படிச் செய்ய முடியும்?" என்று வள்ளுவரையே கேட்கின்றோம். அவர் நம்மை அழைத்துக் கொண்டு யானைக் காட்டுக்கு சென்று ஒரு யானையைக் காட்டுகிறார். அதன் உடம்பை 20, 30 அம்புகள் துளைத்து இருக்கின்றன. சில அம்புகள் அதன் உடம்பிலேயே புதைந்தபடி காட்சியளிக்கின்றன. அம்புபட்ட இடங்களிலிருந்துகுருதி கொட்டிக் கொண்டிருக்கிறது. "அப்போதும் அந்த யானை அழாமல் வருந்தாமல் சுருண்டு விழாமல் பீடு நடை நடந்து, தன் பெருமிதத்தை நிலைநிறுத்துகிறது பார்" என்று வள்ளுவர் நம்மைத் தூண்டுகிறார். அப்போதுதான் நமக்கு, எத்தனை இடையூறு வந்தாலும் சிறிதும் கலங்காமல் நாம் மேற்கொண்ட காரியத்தைச் செய்யும் துணிவும் ஏற்படுகிறது. எப்படி இந்த அறிவுரை!
சிதைவிடத்து ஒல்கார் உரவோர் புதையம்பிற்
பட்டுப் பாடூன்றும் களிறு (597)
இது எட்டாவது யானை.
திருக்குறளில் உள்ளதே எட்டு யானைகள்தாம். அந்த எட்டு யானைகளையும் வள்ளுவர் செயல்திறனுக்கே பயன்படுத்தி நம்மை ஊக்குவிக்கிறார். எப்படி குறள் காட்டும் செயல்திறன்?
இவற்றைப் படித்ததும், எதையாவது செய்து தீர வேண்டும் என்ற எண்ணமும் ஊக்கமும் நமக்கும் உண்டாகின்றன. செயலில் இறங்குகிறோம். உடனே வள்ளுவர்,
"தம்பி! செயல்திறனைக் காட்டுவதற்காக எதையாவது செய்துவிடாதே. செய்யத் தக்கதை மட்டுமே செய்ய வேண்டும். அதைச் செய்யாவிட்டாலும், செய்யத்தகாத எதையும் செய்துவிட்டாலும் நாடும் கெடும்; சமூகமும் கெடும்; குடும்பமும் கெடும்; நீயும் கெடுவாய்" என்று கூறுகிறார்.
செயத்தக்க அல்ல செயக்கெடும் செய்தக்க
செய்யாமை யானும் கெடும். (466)
இப்படிப் பொதுவாக கூறிவிட்டால், நமக்கு என்ன விளங்குகிறது? செய்யத் தக்கது எது? செய்யத் தகாதது எது? என்பது புரிய வேண்டாமா? என எண்ணுகிறோம். திருக்குறள் அந்த அளவிற்கும் சென்று நமக்கு விளக்குகிறது.
செய்யத் தக்கவை
1. நாட்டிற்கும் மொழிக்கும் தனக்கும் பிறருக்கும் நன்மையளிக்கும் செயல்கள் அனைத்தும் இன்பம் பயக்கும் செயல்கள். அச் செயல்கள் அனைத்தையும் செய். மேலும் அவற்றைச் செய்யும்பொழுது பலரால் பலவிதமான துன்பங்கள் பலவேறு வழிகளில் வந்து உன்னைத் துன்புறுத்தும். அப்பொழுதும் அத்துன்பங்கள் அனைத்தையும் கடந்து நின்று நற்செயல்களைச் செய்து முடிக்கவேண்டும்.
துன்பம் உறவரினும் செய்க துணிவாற்றி
இன்பம் பயக்கும் வினை. (669)
2. பழியையும் பாவத்தையும் உண்டாக்குகின்ற தீயசெயல்களில் எதையும் செய்துவிடாமல், இன்பத்தையும் புகழையும் தருகின்ற அறச்செயல்கள் அனைத்தையுமே செய்து மகிழ்.
செயற்பால தோரும் அறனேஒருவற்கு
உயற்பால தோரும் பழி. (40)
3. அந்த அறச்செயல்களையும் இன்றே செய்! இப்போதே செய்! பின்பு செய்யலாம் என ஒத்திப் போடாதே! ஒத்திப்போட்டால் அதை நீ நினைக்கின்ற காலத்தில் செய்ய முடியாமற் போனாலும் போய்விடும். அப்போது நீ அடையவேண்டிய பலனையும் இழந்து விடுவாய்.
அன்றறிவாம் என்னாது அறஞ்செய்க மற்றுஅது
பொன்றுங்கால் பொன்றாத் துணை. (36)
4. நல்ல வழியில் பொருளைத் தேடு. சிக்கனமாக வாழ்வை நடத்து. எஞ்சிய பொருளைச் சேமித்துவை. அதையும் பாதுகாத்து வை. அப்பொழுதுதான் நட்பும் சுற்றமும் பெருகும். வாழ்வும் ஒளிவீசும். அதுமட்டுமல்ல; பகைவரும் தானே அடங்குவர்.
செய்க பொருளைச் செறுநர் செருக்கறுக்கும்
எஃகு அதனிற் கூரியது இல். (759)
5. நல்லவைகளைச் செய்வதிலும் அது வெற்றி பெறும் வழிகளை நன்றாக எண்ணிச் செய்யவேண்டும். ஆராயாமல் ஒரு செயலைச் செய்யத் தொடங்கிவிட்டுப் பின்பு அதை எப்படிச் செய்யலாம் என்று எண்ணுவது நல்லதல்ல. அது வெற்றிபெறத் துணைசெய்யாது.
எண்ணித் துணிக கருமம் துணிந்தபின்
எண்ணுவம் என்பது இழுக்கு, (467)
6. இன்சொல் கூறுதல், நட்புக் கொள்ளுதல், பொருள் வழங்குதல் ஆகிய நற்செயல்களைச் செய்வதிலும் தவறு உண்டாகிவிடும். ஆகவே அவைகளை அதற்கு உரியவரல்லாதவர்களுக்குச் செய்துவிடக் கூடாது. செய்தால், அவை நற்செயலாக இருப்பினும் தீமையாக முடிந்துவிடும்.
நன்றாற்ற லுள்ளும் தவறு உண்டு அவரவர்
பண்பு அறிந்து ஆற்றாக் கடை. (469)
7. எந்த ஒரு நல்ல காரியத்தைச் செய்தாலும் அது வெற்றியாக முடிவதற்கு ஏற்ற வழியையும், முயற்சியையும், அதற்கு வரும் இடையூறுகளையும், அவற்றை விலக்கி முடிக்கும் முறையையும், அதனால் வரும் பயனையும் நன்றாக எண்ணிப் பார்த்தே செய்யவேண்டும்.
முடிவும் இடையூறும் முற்றியாங்கு எய்தும்
படுபயனும் பார்த்துச் செயல். (576)
இந்த ஏழு குறள்களாலும் இதுபோன்ற பிற பல குறள்களாலும் மக்களாகப் பிறந்தவர்கள் செய்ய வேண்டிய நற்செயல்களைச் செய்யும் வழிவகைகளை யெல்லாம் குறள் கூறுகிறது.
செய்ய வேண்டியவைகளைச் செய் என்பது மட்டுமல்ல, செய்யத்தகாதவைகளையும், செய்யக் கூடாதவைகளையும் கூடக் குறிப்பிட்டு, அவற்றைச் செய்யற்க என்றும் குறள் கட்டளையிடுகிறது. அவற்றுள் சில.....
செய்யத் தகாதவை
1. பெற்ற தாயின் வயிறு பசிக்கக் காண்பது பிறந்த மகனுக்கு இழிவு. ஏனெனில், அவன் பத்து மாதம் குடியிருந்த கோயில் அது. ஆகவே அவன் பெரிதும் முயன்று அத் தாயாரின் பசியைப் போக்கவேண்டியது அவனது கடமை. ஆனால் அந்த நிலைமையிலும் சான்றோர்களால் பழிக்கத்தகுந்த தீயவழிகளில் பொருளைத் தேடி அப் பசியைப் போக்கும் செயலைச் செய்யக்கூடாது என்றும் குறள் கூறுகிறது.
ஈன்றாள் பசி காண்பா னாயினும் செய்யற்க
சான்றோர் பழிக்கும் வினை. (656)
2. உன் உயிரே போவதாய் இருப்பினும் சரி, பிற உயிர்களை கொன்று தின்று உன் உயிரைக் காப்பாற்றும் செயலைச் செய்யாதே. அது மட்டுமல்ல; உன்னை ஒன்று கொல்ல வந்தாலும் அதனைக் கொன்று உன் உயிரைக் காப்பாற்றிக்கொள்ள நினையாதே. அவ்வாறு கொன்று உயிர் வாழ்ந்தால் அது பழிபாவத்தோடு உயிர் வாழும் செயலாகப் போய்விடும்.
தன்னுயிர் நீப்பினுஞ் செய்யற்க தான்பிறிது
இன்னுயிர் நீக்கும் வினை. (327)
3. என்னிடத்தில் ஒன்றுமில்லையே, நான் வறியன் என்று எண்ணி, அது தீருதல் பொருட்டு, பிறர்க்குத் தீவினைசெய்து பொருள்திரட்டி உயிர் வாழக்கூடாது, அவ்வாறு செய்தால் நீ வெகு விரைவில் அதற்குமேலும் வறியவன் ஆகிவிடுவாய்.
இலன் என்று தீயவை செய்யற்க செய்யின்
இலன் ஆகும் மற்றும் பெயர்த்து. (205)
4. ஒரு செயலைச் செய்துவிட்டு, "நான் என்ன காரியம் செய்துவிட்டேன்" என்று பின்னே இரங்கி வருந்தும் செயல்களை ஒருக்காலும் செய்யாதே. தவறிச் செய்துவிட்டால், அதற்காக வருந்து! அழு! மறுபடியும் அத்தகைய செயல்களைச் செய்யாதே. அது நல்லது.
எற்றென்று இரங்குவ செய்யற்க; செய்வானேல்
மற்றன்ன செய்யாமை நன்று. (655)
5. துன்பங்களில் அகப்பட்டுக்கொண்டோமே என்று அது தீருதல் பொருட்டு இழிவுதரும் செயல்களை நன் மக்கள் செய்வதில்லை. ஆகவே நீயும், அத்தகைய இழிசெயல்களைச் செய்து, துன்பத்திலிருந்து மீளும் செயல்களைச் செய்து விடாதே.
இடுக்கட் படினும் இழிவந்த செய்யார்
நடுக்கற்ற காட்சி யவர். (654)
6. அதிக வட்டியை எதிர்பார்த்து, உள்ள முதலையும் இழந்து விடுகின்ற தீயசெயல்களை அறிவுடைய மக்கள் செய்ய மாட்டார்கள். ஆகவே பின்னேவருகிற பொருளை எதிர்பார்த்து முன்னே உள்ள செல்வத்தையும் இழந்து வருந்துகிற கொடுஞ் செயலை நீயும் செய்யாதே.
ஆக்கம் கருதி முதல் இழக்கும் செய்வினை
ஊக்கார் அறிவுடை யார். (463)
7. உனக்கு வரும் வருவாய் திடீரென்று குறைந்து விட்டாலும் வருந்தாதே. உடனே உன் செலவினத்தைக் குறைத்துக்கொள். அதனால் கேடு வராது. ஒரு குளத்துக்கு தண்ணீர் வந்து கொண்டிருந்த வாய்க்காலின் நீர் தடைப்பட்டால் உடனே வடிகாலை அடைத்துவிடு. அதனால் நன்மை உண்டு.
ஆகாறு அளவிட்டித் தாயினும் கேடில்லை
போகாறு அகலாக் கடை. (478)
இந்த ஏழு குறள்களாலும், இதுபோன்ற பிற குறள்களாலும் செய்யத்தகாதவைகளை குறள் குறிப்பிட்டுக் கூறியிருக்கிறது.
வெற்றிபெற வழி வகைகள்
மக்களாய் பிறந்தவர்கள் செயல்திறனைப் பெறுவதற்கு உரிய வழிவகைகளையும் குறள் கூறுகிறது. அது ஒரு நல்ல காரியத்தைச் செய்து வெற்றிபெறும் ஆற்றலைப் பெறவேண்டுமானால் பொருள், கருவி, காலம், வினை இடம் ஆகிய ஐந்தையும் மயக்கமற எண்ணிச் செய்தல்வேண்டும் என்பது. ஆகவே நீயும் அழியும் பொருளையும், ஆகும் பொருளையும், உன் கருவியையும், மாற்றான் கருவியையும், உனக்காகும் காலத்தையும், பிறர்க்கு ஆகும் காலத்தையும், உன் வலிமையையும், எதிரி வவிமையையும், நீ வெல்லும் இடத்தையும், எதிரி வெல்லும் இடத்தையும் எண்ணிப் பார்த்துச் செய். அவ்வாறு செய்தால் நீ வெற்றி பெறும் ஆற்றலை எளிதில் பெற்றுவிடுவாய்.
பொருள் கருவி காலம் வினை இடனொடு ஐந்தும்
இருள் தீர எண்ணிச் செயல். (675)
வேண்டியது என்ன?
செயல் திறனுக்கு வேண்டியது என்ன என்பதையும் குறள் கூறுகிறது. ஒரு செயலைச் செய்து முடிக்கத் துணை புரிவது அரசாங்கத்தின் உதவி அல்ல. நண்பர்களின் துணை அல்ல. உறவினர்களின் ஒத்துழைப்பு அல்ல, பணமும் அல்ல. வேண்டியது ஒன்றே ஒன்று தான். அது மனஉறுதியே என்று குறள் கூறி நம்மை ஊக்கப்படுத்துகிறது.
வினைத்திட்பம் என்பது ஒருவன் மனத்திட்பம்
மற்றைய எல்லாம் பிற. (661)
இதுகாறும் கூறியவற்றால் திருவள்ளுவர் தமது திருக்குறளில் செயல் திறனைப்பற்றி எவ்வளவு அழகாக, ஆழமாக, விரிவாக, அழுத்தமாகக் கூறியிருக்கிறார் என்பது நன்கு விளங்கும்.
தம்பி, படித்தாயா? இன்னும் ஒருமுறை படி, நன்கு சிந்தித்து உணர். அந்த அளவோடு விட்டுவிடாதே. செயல்திறனைப் பெற்றுச் செய்யவேண்டியவைகளைச் செய்து சிறப்பெய்தி வாழ்.
என்ன பண்ணுகிறது, என்ன செய்கிறது?
என்ற சொற்களை நீ ஒருபோதும் சொல்லாதே. அவை ஒன்றும் பண்ணத் தெரியாதவர்களும், ஒன்றும் செய்யத் தெரியாதவர்களும் கூறுகிற சோம்பேறித்தனமான சொற்கள். அவர்களை வெறுத்து ஒதுக்கு; வெற்றிபெறு! நல்லதையே எண்ணு! நல்லதையே சொல்லு! நல்லதையே செய்! நல் வாழ்வு வாழ்வாய்!
வாழட்டும் தமிழகம்!
வளரட்டும் செயல்திறன்!!
முத்தமிழ்க் காவலரின் நூல்கள்
இளங்கோவும் சிலம்பும்
எனது நண்பர்கள்
தமிழின் சிறப்பு
தமிழ்ச் செல்வம்
வள்ளுவரும் குறளும்
திருக்குறட் கட்டுரைகள்
திருக்குறள் புதைபொருள் (2 பகுதிகள்)
எண்ணக் குவியல்
ஐந்து செல்வங்கள்
ஆறு செல்வங்கள்
மும் மணிகள்
நான் மணிகள்
தமிழ் மருந்துகள்
அறிவுக்கு உணவு
நல்வாழ்வுக்கு வழி
நபிகள் நாயகம்.
முத்தமிழ்க் காவலர்
கி.ஆ.பெ. விசுவநாதம் நூல்கள்
தமிழ்ச் செல்வம்
தமிழின் சிறப்பு
அறிவுக் கதைகள்
எனது நண்பர்கள்
வள்ளுவரும் குறளும்
வள்ளுவர் உள்ளம்
திருக்குறள் கட்டுரைகள்
திருக்குறளில் செயல் திறன்
திருக்குறள் புதைபொருள் (முதற் பகுதி)
திருக்குறள் புதைபொருள் (இரண்டாம் பகுதி)
மும்மணிகள்
நான்மணிகள்
ஐந்து செல்வங்கள்
ஆறு செல்வங்கள்
அறிவுக்கு உணவு
தமிழ் மருந்துகள்
மணமக்களுக்கு
இளங்கோவும் சிலம்பும்
நல்வாழ்வுக்கு வழி
எண்ணக்குவியல்
வள்ளலாரும் அருட்பாவும்
மாணவர்களுக்கு
பா ரி நி லை ய ம்
184, பிராட்வே, சென்னை-600 108.
Wrapper Printed at M.K. Color Process, Triplicane,
Madras-600 005. Phone : 841.478